ஆடிப்பெருக்கு விழா: தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்

கிருஷ்ணராய புரம் அருகே ஆடிப்பெருக்கு விழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.

Update: 2024-08-04 13:15 GMT

பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்த பூசாரி.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மேட்டுமகாதானபுரம் ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு ஆடி 19-ம் தேதியான இன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். நேர்த்திக்கடன் செலுத்திய  பக்தர்கள் ஆடி 1-ம் தேதி முதல் காப்பு கட்டி விரதம் இருந்தனர். விழாவையொட்டி காவிரியில் இருந்து சனிக்கிழமை ஊர்வலமாக தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. சக்தி அழைப்பும் தொடர்ந்து இரவு அம்மன் காவிரி ஆற்றுக்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் இன்று காவிரி ஆற்றில் குளித்து விட்டு வந்து கோயில் முன்பு வரிசையில் அமர்ந்திருந்தனர். பலர் மொட்டை தலையுடன் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பரம்பரை பூசாரி பெரியசாமி கால்களில் ஆணி செருப்பு அணிந்து, அம்பு போட்டவுடன் அருள் பெற்று வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தார். சிதறிய தேங்காய் மூடிகளை பக்தர்கள் பிரசாதமாக எடுத்து சென்றனர். ஒரு சிலருக்கு தலையில் காயம் ரத்தம் வந்தது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். குளித்தலை உட்கோட்ட டி.எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கரூர், திருச்சி, முசிறி, மணப்பாறை ஆகிய ஊர்களிலிருந்து கோவிலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

Tags:    

Similar News