தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதி: கேரள அரசு உறுதி

தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதி செய்து கொடுப்பதாக கேரள அரசு உறுதியளித்துள்ளது.

Update: 2023-12-14 06:43 GMT

நிலக்கல் பேருந்து நிலையத்தில் முண்டியடித்து ஏறும் பக்தர்கள்.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது வழக்கம். இந்த ஆண்டு சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்கள் பலர் சன்னிதானம் செல்லாமலேயே பாதி வழியில் திரும்பி வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில் தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்தபடி கோவிலுக்குச் வந்து செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 85 ஆயிரம் பேர் தரிசனம் செய்து வரும் நிலையில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வாகனங்களில் வரும் பக்தர்கள் எரிமேலி உள்ளிட்ட சில பகுதிகளில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பக்தர்கள் பம்பா நதியில் குளித்துவிட்டு அங்குள்ள கணபதியை தரிசிக்கவே பல மணி நேரம் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் அடைக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் கூட செய்துதரப்படவில்லை. 

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், வரிசையில் காத்திருக்கும்போது 2 பிஸ்கட்டுகள் மட்டுமே அளிக்கப்படுகிறது. தண்ணீர் கூட தருவதில்லை. எரிமேலியில் டோக்கன் சிஸ்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் எரிமேலிக்கு செல்லாமலேயே திரும்பிவிடுகின்றனர். 

ஐயப்ப பக்தர்கள் ஆன்லைனில் புக் செய்துவிட்டுதான் வருகிறார்கள். அப்படி இருக்கும்போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்துதராதது வருத்தமளிப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

தேவஸ்தானம் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்க வேண்டும் என முடிவு செய்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருப்பதால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் காவலர்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கும் படி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டும் தேவஸ்தானம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்ய நீண்ட நேரம் ஆகும் என்பதால் பலர் சன்னிதானத்திற்கு செல்லாமலேயே மற்ற இடங்களில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கைய ஏற்று கேரளாவில் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்கப்படும் என கேரள தலைமைச் செயலாளர் உறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து கேரள ஐயப்பன் கோவிலுக்குச் சென்றுள்ள பக்தர்கள் அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் இன்றி மிகவும் சிரமப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதனையொட்டி,  முதலமைச்சர் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை கேரள மாநில தலைமைச் செயலாளர் அவர்களுடன் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து உதவிகளையும் ஏற்பாடு செய்து உதவிட கேட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

அதன்படி, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்  சிவ் தாஸ் மீனா, கேரள மாநில தலைமைச் செயலாளர் வி. வேணு, அவர்களிடம் தொலைபேசி மூலம் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மூலம்   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, கேரள மாநில தலைமைச் செயலாளர் அவர்கள் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு கேரளாவில் தக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், பாதுகாப்பினை உறுதி செய்யவும் கேரள மாநில அரசு சார்பில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து கேரள பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் சபரிமலை நிலக்கல் வாகன நிறுத்துமிடத்திற்கு சென்று பயணிகளுக்கான வசதிகளை ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News