அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 5 நீதிபதிகளுக்கு அழைப்பு

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க 5 நீதிபதிகளுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

Update: 2024-01-19 15:34 GMT

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகளுக்கும் கும்பாபிஷேக அழைப்பிதழ்  வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 22ம் தேதி நடக்கும் கும்பாபிஷேக விழாவில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த 5 நீதிபதிகள் யார்? என்பது பற்றிய இங்கு பார்ப்போம்.

இந்தியாவில் நீண்டகால சட்டபோராட்டம் நடந்த வழக்குகளில் ஒன்று தான் அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வழக்கு. கீழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை இந்த வழக்கு சென்றது. இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடந்த 2019ல் முடிவுக்கு வந்தது.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் இதற்கு முக்கிய காரணமாகும். அதாவது 2019 நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இது வரலாற்றுமிக்க தீர்ப்பு என கூறப்பட்டது.

இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்தா எனும் அறக்கட்டளையின் கண்காணிப்பு கட்டுமான பணி தொடங்கியது. இந்த பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது முதற்கட்ட பணி  முடிவடைந்துள்ள நிலையில் வரும் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மேலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச்சின் 5 நீதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், முன்னாள் தலைமை நீதிபதி போப்டே, தற்போதைய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் இருந்தனர். இந்த அமர்வு தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என தீர்ப்பு வழங்கியது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம். சர்ச்சைக்குரிய 2.77 நிலம் இந்து அமைப்புகளுக்கு செல்லும். சர்ச்சைக்குரிய இடம் தங்களுக்கு சொந்தமானது என்று நிரூபிக்க இஸ்லாமிய அமைப்புகள் தவறவிட்டன. அயோத்தி நிலம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது. 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசால் அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு வழங்கப்படவேண்டும். அந்த அறக்கட்டளை மூன்று மாத காலத்துக்குள் அமைக்கப்படவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி உத்தரவிட்ட இந்த 5 நீதிபதிகளுக்கும் அழைப்பிதழ்  வழங்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வரும்படி தீர்ப்பு வழங்கிய 5 பேருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீதித்துறை சார்ந்து மொத்தம் 50க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பிதழ்  வழங்கப்பட்டுள்ளது. அதில் முன்னாள் தலைமை நீதிபதிகள், நீதிபதிகள் மற்றும் முக்கிய வழக்கறிஞர்கள்அடங்குவர். மேலும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் ஐந்து பேரும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார்களா? எனபதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Tags:    

Similar News