ஸ்ரீ லட்சுமி தேவி-16 வகை செல்வங்களையும் அள்ளித் தரும் லட்சுமி வழிபாடு

16 வகை செல்வங்களையும்,அள்ளித் தரும் ஸ்ரீ லட்சுமி தேவியின் வடிவங்களையும்,எப்படி வணங்க வேண்டும் என்பதைப் பற்றியும் காணலாம்.

Update: 2021-07-19 05:12 GMT

ஸ்ரீ லட்சுமி தேவி

16 வகை செல்வங்களையும், அள்ளித் தரும் ஸ்ரீ லட்சுமி தேவியின் வடிவங்களையும், அவர்களை எப்படி வணங்க வேண்டும் என்பதைப் பற்றியும் காணலாம்.

1.ஸ்ரீதனலட்சுமி: போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பார்கள். கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன், எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

2.ஸ்ரீவித்யாலட்சுமி: இவளின் அருளுக்குப் பாத்திரமாக வேண்டுமென்றால், நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். சுற்றத்தாரிடமும்,உற்றாரிடமும் ,மற்ற உயிர்களிடமும் அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும்.

3.ஸ்ரீதான்யலட்சுமி: தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரைப் போல, பசியால் வாடிய மக்களுக்கு அன்னம் அளித்தால் இந்த லக்ஷ்மியின் அருளைப் பெறலாம்.

4.ஸ்ரீவரலட்சுமி: உடல் பலம் இளமையாக இருக்கும் போது மட்டுமே நமக்குத் துணை புரியும். ஆனால் இரத்த ஓட்டம் அடங்கி,நாடி நரம்பெல்லாம் ஒடுங்கும் போது நமக்கு இந்த அன்னையின் கருணை வேண்டும். செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மணம் வருந்தி ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

5.ஸ்ரீசவுபாக்யலட்சுமி: யார் ஒருவர் பிறரின் சந்தோஷத்தில் தன்னுடைய சந்தோஷத்தைக் காண்கிறார்களோ அவர்களிடம் ஸ்ரீதேவி மகிழ்ச்சியின் உருவில் இருக்கின்றாள். பிறர் நலனில் சந்தோஷம் காண்பவர்களுக்கு இந்தத் தேவியின் அருள் எப்போதும் உண்டு.

6.ஸ்ரீசந்தானலட்சுமி: உலகிலேயே சிறந்து தாய்மை. காணும் உயிர்களிடத்து தாயன்பு இருந்தால் போதும், இவளின் கடைக்கண் பார்வை நிச்சயம்.

7.ஸ்ரீகாருண்யலட்சுமி: ஜீவகாருண்யமே இவள் நம்மிடம் எதிர்பார்ப்பது. எல்லா உயிர்களிடமும் கருணையோடு நாம் பழகினால், அன்னையின் கருணை நமக்குக் கிட்டும்.

8. ஸ்ரீமகாலட்சுமி: அடுத்தவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் போதும், நமக்கு ஒரு குறையும் வராது, ஸ்ரீ மகாலட்சுமி நமக்குச் செல்வங்களை வாரி வழங்குவாள்.

9. ஸ்ரீசக்திலட்சுமி: எந்த வேலையும் செய்யும் சக்தியை நமக்குக் கொடுப்பவள். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையே நமக்கு வேண்டும். நம்பிக்கையோடு இவளைத் துதித்தால், நமக்கு என்றும் குன்றா சக்தியைக் கொடுப்பாள்.

10.ஸ்ரீசாந்திலட்சுமி: வாழ்வில் வரும் இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவித்து வாழ்பவர்களுக்கு இவளின் ஆசி எப்போதும் உண்டு. ஸ்ரீசாந்தி லட்சுமியைத் தியானம் செய்தால் வாழ்வில் என்றுமே சாந்தம் தான்.

11.ஸ்ரீசாயாலட்சுமி: கீதையில் கண்ணன் சொன்னது போல்,கடமையைச் செய்துவிட்டுப் பலனை எதிர்பார்க்காமல் ,இறைவனைச் சரணடைந்தவர்களுக்கு அருள் புரிபவள்.

12.ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி: எப்போதும் ஆன்மீகத் தேடலோடு, ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்தால் நலம் அடையலாம்.

13.ஸ்ரீசாந்தலட்சுமி: பொறுமையைத் தன் வாழ்க்கையின் தாரக மந்திரமாகக் கொண்டவர்களுக்கு சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

14.ஸ்ரீகிருத்திலட்சுமி: புகழ்,கீர்த்திக்கு ஆசைப்படாதவர்கள் இவ்வுலகில் யாரேனும் உண்டோ?. செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருளால் புகழ் தானாக வரும்.

15.ஸ்ரீவிஜயலட்சுமி: விடாத முயற்சியோடு,கடினமான உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் எடுத்த காரியங்களிலும் ஸ்ரீவிஜயலட்சுமி வெற்றியை அருள்வாள்.

16.ஸ்ரீஆரோக்கிய லட்சுமி: ஆரோக்கியமான மனதில் இருந்து ஆரோக்கியமான சிந்தனை வெளிப்படும் என்பார்கள். உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இந்தத் தேவியின் அருள் நமக்கு வேண்டும். கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற எதிர்மறை எண்ணங்களைத் தோன்றாமல் இருக்க இவளின் கருணையை வேண்டலாம்...

Tags:    

Similar News