பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க: வாழ்த்தின் உண்மை அர்த்தம் தெரியுமா?
16 Selvam in Tamil-பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர்கள் சிறியோர்களை வாழ்த்துவது தமிழர் மரபு. அது என்ன பதினாறு செல்வங்கள்?;
16 Selvam in Tamil
16 Selvam in Tamil-பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டுமாம். இந்த பதினாறு பேறுகளும் என்ன என்று ஒருமுறை கூட நாம் சிந்தித்திருக்கிறோமா !
இதில் இன்னொரு வேடிக்கை என்ன என்றால் சிலர் பதினாறும் பெற்று என்றால் பதினாறு பிள்ளைகளைப் பெற வேண்டும் என்றுதான் வாழ்த்துகிறார்கள் என நினைத்திருப்பார்கள்.
பதினாறு பிள்ளைகள் பெற்றால் வீடு தாங்குமா!....நாடுதான் தாங்குமா! பதினாறு பேறு என்பது மக்கட்பேறு அல்ல.
பதினாறு வகையான செல்வங்கள் பெற்று நல்வாழ்வு வாழ்க என வாழ்த்துவதாக அமையும். பதினாறு செல்வங்கள் என்றால் உண்மையில் என்னென்ன?
ஒருவர் புகழினை அடைந்தால் அவர் கல்வியில் குறைந்தவராக இருப்பார். நன்மக்களைப் பெற்றால் நோயுற்றவராக இருப்பார். பெருமை கிடைத்தால் ஆயுள் குறையும். ஆயுள் இருந்தால் பொருள் இருக்காது. இப்படி ஏதாவது ஒரு குறை இருந்தால் நீங்கள் பிறவாமை என்னும் வரத்தை அடைய முடியாமல் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டி இருக்கும். இந்தப் பதினாறு செல்வங்களையும் அடைந்த பிறகே நீங்கள் மீண்டும் மண்ணுலகில் வராமல் இருப்பீர்கள்.
அதேபோன்று, வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அடைய நினைப்பது என்னவோ இந்த பதினாறு வகையான செல்வங்களையும் தான். இதில் எல்லாவற்றையும் ஒருவர் அடைந்து விட்டால் அவர் முழுமை பெறுகின்றார் அல்லது மீண்டும் மீண்டும் பிறந்து மனிதப் பிறவியை முழுமையாக கழிக்க வேண்டியிருக்கும். இதை கர்மா என்கிறோம்.
அவரவருடைய பாவ, புண்ணிய பலன்களுக்கு ஏற்ப இந்த பதினாறு செல்வங்களையும் ஒரு ஜென்மத்தில் அடைகின்றனர். புண்ணியம் செய்தவர்கள் சிலர் இப்பிறவியிலேயே இந்த 16 விஷயங்களையும் அடைந்து விடுகின்றனர். ஆனால் பாவம் செய்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இந்தப் பதினாறு செல்வங்களையும் அடைந்து பின்னர் மோட்சத்தை முழுமையாக பெறுகின்றனர். மீண்டும் பிறவாமை என்கிற வரத்தை அடைகின்றனர்.
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று சொன்னால், அது 16 குழந்தைகள் அல்ல, 16 செல்வங்கள். கி.ஆ.பெ. விசுவநாதம் தன்னுடைய நூலில் இதுகுறித்துக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். 16 செல்வங்கள் என்பது கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை, முயற்சி, வெற்றி என்பவைதான்.
1. நோயில்லாத உடல் 2. சிறப்பான கல்வி 3. குறைவில்லாத தானியம் 4. தீமை இன்றி பெறும் செல்வம் 5. அற்புதமான அழகு 6. அழியாத புகழ் 7. என்றும் இளமை 8. நுட்பமான அறிவு 9. குழந்தைச் செல்வம் 10. வலிமையான உடல் 11. நீண்ட ஆயுள் 12. எடுத்தக் காரியத்தில் வெற்றி 13. சிறப்பு மிக்க பெருமை 14. நல்ல விதி 15. துணிவு 16. சிறப்பான அனுபவம்
இதை தான் அபிராமி பட்டர் மிக அழகாக அபிராமி அந்தாதியில் கூறியுள்ளார்.
கலையாத கல்வியும்
குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும்
குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும்
அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும்
கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில்அன்பும்
உதவிப் பெரிய தொண்டரொடு
கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம்
அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
என்று பாடியுள்ளார்
பதினாறு வகையான பேறுகளாவன:
1. கலையாத கல்வி அதாவது வெற்றிக்கு வழிகாட்டக்கூடிய கல்வி
2 . குறையாத வயது என்பதாவது நீடிய ஆயுள்
3 . கபடு வராத நட்பு அதாவது நம்பிக்கையான நல்ல நண்பர்கள்
4. கன்றாத வளமையும் என்பதாவது வாழ்க்கைக்குத் தேவையான குறைவில்லா செல்வம்
5 குன்றாத இளமை அதாவது உழைப்புக்குத் தளராத உடல் வலிமை
6. கழு பிணி இல்லா உடல் அதாவது எந்தவித நோய்நொடியும் இல்லா உடல் நலம்
7. சலியாத மனம் அதாவது எதற்கும் கலங்காத மனத்திண்மை
8. அன்பகலாத மனைவி அதாவது எக்காலத்திலும் மாறாத அன்பைத் தரும் இனிய மனைவி
9. தவறாத சந்தானம் அதாவது அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் எதுவும் குறைவில்லா குழந்தைகள்
10. தாழாத கீர்த்தி அதாவது மென்மேலும் பெருகி வரும் புகழ்
11. மாறாத வார்த்தை அதாவது சொல் பிறழாமை
12. தடைகள் வாராத கொடை அதாவது இல்லை என்று சொல்லாது எல்லோருக்கும் வழங்கும்படியான நற்பண்பு
13. தொலையாத நிதியம் அதாவது பணத்தைச் சிக்கனமாக கையாளும் நிதி மேலாண்மை
14. கோணாத கோல் அதாவது நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகப் பண்பு
15. துன்பம் இல்லா வாழ்வு அதாவது வாழ்வில் துன்பமே வராத நற்பேறு
16. துய்ய நின் பாதத்தில் அன்பு அதாவது இறை நம்பிக்கை
இத்தகைய பதினாறு வகையான பேறுகள் கிடைக்கப் பெற்று நல்வாழ்வு வாழ்க எனத் தம்பதியரை வாழ்த்துவதுதான் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்பதன் பொருள்.
இவ்வளவு பெரிய வாழ்த்தா? பிரமிப்பாக இருக்கிறதா!.
இவற்றை முழுவதுமாக நினைவில் வைத்து வாழ்த்த முடியாதல்லவா! அதனால்தான் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ... என்று ஒற்றை வரியில் கச்சிதமாக வாழ்த்துகிறோம்.
வாழ்த்தும் வார்த்தைகள் மணமக்களுக்கு வரமாய் இருக்கட்டும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2