ஆயிரம் கரங்கள் நீட்டி அணைகின்ற தாயே போற்றி

இன்று ரத சப்தமி;

Update: 2021-02-19 07:53 GMT

உத்திராயணப் புண்ணியகாலத்தின் மிக முக்கியமான நாள் ரத சப்தமி. அன்றுதான் சூரிய பகவானின் ரதத்தின் திசை மாறும். அன்று முதல் தொடரும் நாட்கள் எல்லாம் மிகவும் புண்ணிய பலன்களைத் தருபவை.  அதனால் ரத சப்தமி நாளில் சூரிய பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்று செய்யப்படும் வழிபாடுகள், சூரியக் கிரகண காலத்தில் கிடைக்கும் புண்ணிய பலன்களைப் போல் பன்மடங்கு பலன்களைத் தருபவை என்றும் சொல்லப்படுகிறது.

எவ்வாறு வழிபடுவது?

இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும்.

இப்படி குளித்தபின் வீட்டில் சூரிய ஒளிபடும் சுத்தமான இடத்தில் செம்மண்ணால் மெழுகி சூரிய ரத கோலமிட்டு, அதில் சூரிய - சந்திரர்களை வரைய வேண்டும். பின் வண்ண மலர்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும்.

கிண்ணங்களில் அரிசி, பருப்பு, வெல்லம் வைத்து, நைவேத்தியத்திற்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடையும் வைக்க வேண்டும். அதன்பின் முதலில் கணபதி பூஜை, பின் சூரிய நாராயண பூஜை செய்ய வேண்டும்.

சூரியனாருக்கு உகந்த தானியம் கோதுமை. எனவே நைவேத்தியத்தில் கோதுமை உணவு இருப்பது உத்தமம். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும்.

பலன்கள் :

சூரியனுக்கு பிடித்த செந்தாமரை மற்றும் செந்நிற மலர்களால் அர்ச்சித்து அவரை வழிபடுவது விசேஷம். ஆலயங்களுக்கு சென்று சூரிய பகவானுக்கு சிவப்பு நிற வஸ்திரம் வழங்கி தரிசித்தால், பாவமெல்லாம் பறந்தோடிவிடும்.

சூரிய பகவானை, ரத சப்தமி நன்னாளில் பூஜித்து வழிபட்டால், ஏழு ஜென்ம பாவமும் விலகிவிடும். அடுத்தடுத்து ஏழு தலைமுறையினரும் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள்.

ரத சப்தமி நாளில் செய்யப்படுகிற தான தருமங்கள், நூறு மடங்கு புண்ணியங்களை சேர்க்கும் என்கிறது சாஸ்திரம்.

நாம் ஆத்மார்த்தமாக வழங்குகிற தானங்களை, சூரிய பகவான் அந்த ரதத்தில் எடுத்துச் சென்று, நம் முன்னோர்களுக்கு வழங்குகிறார். இதனால் பித்ருக்களின் ஆசியும் பரிபூரணமாக கிடைத்து நம் வாழ்க்கை மேன்மையடையும் என்பது நம்பிக்கை.

Tags:    

Similar News