இன்று தைமாத செவ்வாய் பிரதோஷம்

அனைத்து துன்பங்களும் விலக, தைமாத செவ்வாய் பிரதோஷமான இன்று சிவனை வழிபடுங்கள்.;

Update: 2021-02-09 07:41 GMT

தை மாத பிரதோஷ வழிபாடு

சிவ வழிபாட்டில் மிக முக்கியமானதாக கொண்டாடப்படுவது பிரதோஷம். இந்த அற்புதமான பிரதோஷ நன்னாளில், சிவன் கோயிலுக்கு செல்வதும், நந்திதேவரையும், சிவலிங்கத் திருமேனியையும் தரிசிப்பதும் புண்ணியத்தைத் தரும்.

பிரதோஷம் என்பது ஞானத்தையும், யோகத்தையும் வழங்கக்கூடியது. இந்த நாளில், பிரதோஷ காலமான மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் அருகில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று, சிவ தரிசனம் செய்து பிரார்த்தனை செய்வது மிகுந்த பலனை நமக்குத் தரும்.


செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மாலை 3.00 முதல் 4.30 மணி வரை. இந்த நாளில் ராகு கால வேளையில் துர்க்கையம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலான காலம். ராகுகால பூஜையில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட்டு, அதோடு நந்திதேவருக்கும், சிவபெருமானுக்கும் நடைபெறும் பிரதோஷ அபிஷேகங்களையும், ஆராதனைகளையும் கண் குளிர தரிசிப்பது நம் வாழ்வில் இதுவரை இருந்த துன்பங்களையெல்லாம் அடியோடு அகற்றி நிவர்த்தி செய்துவிடும்.

பிரதோஷ தரிசனம் நம் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கக்கூடியது. முற்பிறவியில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களையெல்லாம் போக்க வல்லது. ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷமும் மகத்துவம் வாய்ந்தவை. எண்ணற்ற பலன்களைத் தரக்கூடியவை.

தை மாத செவ்வாய் பிரதோஷம் :

தை மாதத்தில் வரும் பிரதோஷ தரிசனம் நல்லதொரு வழியைக் கொடுக்கக்கூடியது. தை மாத பிரதோஷ தினத்தன்று விரதம் இருந்து மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று, நெய் தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபாடு செய்தால் அனைத்து பாவங்களும் நம்மை விட்டு பறந்து ஓடும். செவ்வாய்கிழமையை மங்கள வாரம் என்பர். அந்தவகையில் இன்று (09.02.2021) தை மாத மங்கள வார பிரதோஷம்.

இந்த பிரதோஷத்தில் வழிபட  வீட்டில் மங்களமும், மனதில் நல்லெண்ணங்களும், இறையருளும் கிடைக்கும். புத்திரபாக்கியம், திருமணத்தடை விலகி மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். அனைத்துவித துன்பங்களும் அகலும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தடையாக உள்ள அனைத்தையும் உடைத்து அடுத்தடுத்து முன்னேறிச் செல்ல வழிவகை உண்டாகும் என்பது பக்தர்கள் அனுபவத்தில் கண்ட உண்மைகள்.

தை மாத பிரதோஷத்தில் நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், சிவபெருமானுக்கு வில்வ இலை சாற்றியும் வணங்கி வழிபடுதல் மிகவும் சிறப்பு.

Similar News