நாதஸ்வர இசைப் பேரறிஞர் ஷேக் சின்ன மவுலானா...
தமிழ், தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளை நன்கு அறிந்திருந்தார்
உலகப் புகழ்பெற்ற தென்னிந்திய நாதஸ்வரக் கலைஞர் ஷேக் சின்ன மவுலானா (Sheik Chinna Moulana) பிறந்த தினம் இன்று (மே 12).
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கரவடி என்ற சிற்றூரில் 1924 ம் ஆண்டு மே மாதம் 12 ம் தேதி பிறந்தார். இவரது குடும்பமே இசைப் பாரம்பரியம் கொண்டது. ஆரம்பத்தில் தன் தந்தையிடமும் பின்னர் நாதபிரம்மா, நாதஸ்வர தக்ஷா த்ரோவ்குண்டா ஷேக் ஹசன் சாகிப், ஷேக் அதம் சாகிப் ஆகிய கலைஞர்களிடமும் நாதஸ்வரம் கற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளை நன்கு அறிந்திருந்தார். ராமாயணம், உள்ளிட்ட புராணங்களை சமஸ்கிருத்தில் கற்றுத் தேர்ந்தவர். மிகவும் பிரபலமான 'தஞ்சாவூர் பாணி' வாசிப்பு முறையின் முக்கியத்துவத்தை உணர்ந்த இவர் அதைக் கற்பதில் ஆர்வம் கொண்ட இவர். நாச்சியார்கோவிலைச் சேர்ந்த ராஜம் - துரைக்கண்ணு சகோதரர்களிடம் சில ஆண்டுகள் நாதஸ்வரம் கற்றார்.
டி.என்.ராஜரத்தினம் பிள்ளையை தனது மானசீக குருவாக ஏற்றிருந்தார். அவரது வாசிப்பு முறையை சிறுவயது முதலே நன்கு கவனித்து, அந்த நுட்பங்களைத் தனது இசையில் இணைத்துக்கொண்டார். இவரது முதல் நிகழ்ச்சி 1960-களில் தமிழ்நாட்டில் நடைபெற்றது. உடனடியாக இசை உலகின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து பல கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
ஸ்ரீரங்கநாதரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்ததால் ஸ்ரீரங்கத்தில் குடியேறினார். சிருங்கேரி மடத்தின் ஆஸ்தான வித்வானாகவும் நியமிக்கப்பட்டார். விரைவில் இந்தியாவின் முக்கிய நாதஸ்வர கலைஞர்களில் ஒருவராகப் புகழ்பெற்றார். காவிரி ஆற்றங்கரையில் சாரதா நாதஸ்வர சங்கீத ஆஸ்ரமத்தைத் தொடங்கினார்.
ராக ஆலாபனை இவரது தனிச்சிறப்பு. நாதஸ் வர இசையை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமடையச் செய்ததில் பெரும் பங்காற்றினார். திருவையாறு ராஜா இசைக் கல்லூரியில் இசை பேராசிரியராகவும் பணியாற்றினார்.
இவரது ஆஸ்ரமத்தில் பல திறமையான கலைஞர்கள் உருவானார்கள். ஏராளமான இசைத் தொகுப்புகள் வெளிவந்தன. இந்திய திரைப்படப் பிரிவு சார்பில் இவரைப்பற்றி தயாரிக்கப்பட்ட 'டாக்டர் ஷேக் சின்ன மவுலானா' என்ற படம், 31-வது தேதிய திரைப்பட விழாவிலும் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
25-வது சுதந்திர தின கொண்டாட்டம், 50-வது சுதந்திர தின கொண்டாட்டம் உட்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் இவர் வாசிப்பு இடம்பெற்றது. இலங்கை, அமெரிக்கா, கனடா, ஹாங்காங், ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், பின்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 1973-ம் ஆண்டில் நியுயார்க்கில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இவருக்கு நாதஸ்வர ஆச்சார்யா என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1991-ல் ஜெர்மனியில் நடைபெற்ற இந்திய திருவிழாவின் தொடக்க விழா நிகழ்ச்சியில் இவரது கச்சேரி இடம்பெற்றது.
அதைத் தொடர்ந்து ஜெர்மனி முழுவதும் இவரது ஏராளமான கச்சேரிகள் நடைபெற்றன. உலகம் முழுவதும் உள்ள தன் ரசிகர்களால் 'ஷேக்' என அன்புடன் அழைக்கப்பட்டார். மங்கல வாத்ய விசாரதா, கலைமாமணி, பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாதமி விருது, கானகலா பிரபூமா, கந்தர்வ கலாநிதி, நாதஸ்வர கலா பிரவீணா, அகில பாரத நாதஸ்வர ஏக சக்ராதிபதி, சங்கீத கலாநிதி, இசைப் பேரறிஞர் உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பரிசுகள், பட்டங்களைப் பெற்றுள்ளார்.இறுதிவரை நாதஸ்வர இசைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கி வந்த ஷேக் சின்ன மவுலானா 1999-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 75-வது வயதில் மறைந்தார்.