' மத்திய சதுக்கம்' சென்னையின் அடையாளமாக இரட்டை கட்டடம்.

சென்னையின் அடையாளமாக மாறப்போகும் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மத்திய சதுக்கத்தை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்

Update: 2022-03-29 08:57 GMT

சென்னையின் அடையாளமாக மாறப்போகும் சென்னை மத்திய சதுக்கத்தை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ரூ.400 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது மத்திய சதுக்கம்.

சென்னையின் அடையாளமாக மாற உள்ள, 'மத்திய சதுக்கம்' கட்டமைப்பு பணிகள், 389 கோடி ரூபாய் செலவில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.


குறித்த காலத்தில் திட்டத்தை முடிக்கும் வகையில், அதிகாரிகள் பணிகளை வேகப்படுத்தி கத்திப்பாரா 'நகர்ப்புற சதுக்கம்' திட்டத்தில், கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில், 14.50 கோடி ரூபாய் செலவில் பஸ் நிறுத்தங்கள், உணவகங்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, நடைபயிற்சி பூங்கா மற்றும் சிறு கடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இவற்றுக்கு சென்று வர ஏதுவாக, நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மற்றொரு பிரமாண்ட திட்டமாக, மத்திய சதுக்கம் அமைந்துள்ளது. சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, மாநகராட்சி தலைமை அலுவலகமான பாரம்பரியமிக்க ரிப்பன் மாளிகை, விக்டோரியா ஹால் ஆகிய கட்டடங்கள் அமைந்துள்ள பகுதியில், 7.8 ஏக்கர் பரப்பளவிலான இடம் உள்ளது.

இந்த பகுதியை தினமும் பல லட்சம் பேர் கடந்து செல்வதாலும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதாலும், அங்கு கடுமையான நெரிசல் நிலவுகிறது. இந்த நெரிசலை தீர்க்கவும், பல்வேறு கட்டமைப்புகளுடன், உலகத் தரத்திலான சென்னையின் அடையாளத்தை இங்கு உருவாக்கவும், மத்திய சதுக்கம் அமைக்க, கடந்த ஆட்சியில் திட்டமிடப்பட்டது.

சி.எம்.டி.ஏ., நிதியில், 389 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டு, இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன. இரண்டு கட்டங்களாகமத்திய சதுக்கம் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு திட்டத்தில், சென்ட்ரல் மற்றும் மூர் மார்க்கெட் புறநகர் ரயில் நிலைய வளாகத்தை, சென்ட்ரல் மெட்ரோ, பூங்கா நகர் ரயில் நிலையம், மேம்பால ரயில் நிலையம், அரசு பொது மருத்துவ:மனையுடன் இணைக்கும் நான்கு சுரங்க பாதைகள், 40 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும், பரங்கிமலை -- சென்ட்ரல், விமான நிலையம் -- வண்ணாரப்பேட்டை மெட்ரோ வழித்தடங்களை இணைக்கும் கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரே சமயத்தில் 1,000 வாகனங்கள் நிறுத்தக்கூடிய மூன்று அடுக்கு நிலத்தடி வாகன நிறுத்தம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டடம் அமைந்துள்ளது.அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்வதற்கான இரண்டு பஸ் முனையங்கள்; தனியார் ஆட்டோ, டாக்சிகள் நிறுத்தம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.பிரமாண்டமான வகையில் இரண்டு கட்டங்களாக, அருகருகே இரண்டு கட்டடங்களாக, மத்திய சதுக்கம் அமைந்துள்ளது. தரைக்கு கீழ் மூன்றடுக்கு கார் நிறுத்தம், தரைக்கு மேல் 15 மாடிகளுடன் ஒரு கட்டடம் அமைந்துள்ளது. மற்றொரு கட்டடம் தரைக்கு கீழ் ஒரு தளமும், தரைக்கு மேல் ஏழு மாடிகளும் உடையதாக கட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 37 ஆயிரத்து 800 சதுர மீட்டரில் இந்த இரண்டு கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. இதில், ஷாப்பிங் மால், உணவு விடுதிகள், பயணியர் விடுதிகள், பொழுதுபோக்கு அரங்குகள், சுற்றுலா, பஸ், ரயில், விமான போக்குவரத்து அலுவலகங்கள் உட்பட 21 பிரிவுகளில் வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளது. இத்திட்டத்தில், மத்திய சதுக்கம் மற்றும் பூங்காக்கள், நடைபாதைகள் உலகத் தரத்தில் அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News