Powerful Head Light அதிக ஒளி தரும் முகப்பு விளக்கால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம்....
Powerful Head Light பல வாகனங்களில் முகப்பு விளக்காக பயன்படுத்தப்படும் பல்புகள் அனைத்துமே எல்இடி பல்புகளாக இருப்பதால் இதன் அதிக பவர் எதிரே வாகனங்களில் வருவோரை நிலைகுலைந்து போகச் செய்கிறது.
Powerful Head Light
தமிழகத்தில் உலா வரும் டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களின் ஹெட்லைட்டுகளின் பிரகாசமான வெளிச்சத்தால் பொதுமக்கள் நிலைகுலைந்து போவதுடன் தடுமாறித்தான் போகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள்இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
சமீப காலமாக பல வாகனங்களில் முகப்பு விளக்காக பயன்படுத்தப்படும் பல்புகள் அனைத்துமே எல்இடி பல்புகளாக இருப்பதால் இதன் அதிக பவர் எதிரே வாகனங்களில் வருவோரை நிலைகுலைந்து போகச் செய்கிறது. கண்ணைப்பறிப்பதால் எதிரே என்ன வருகிறது என்பது தெரிவதில்லை. இதுபோல் எல்இடி ஹெட்லைட் கொண்ட வாகனங்களை ஓட்டிவருவோரும் டிப் செய்வதில்லை.போக்குவரத்து விதிகளை உரிய முறையில் அவர்கள் கடைப்பிடிக்காததால் விபத்துகள் அதிகம் நடக்கிறது.
எனவே எந்த வாகனங்களாக இருந்தாலும் சரி அதன் ஹெட்லைட்டின் மையப்பகுதியில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டவேண்டும் என்பது விதி. ஆனால் யாருமே ஒட்டாததால் அனைத்து வெளிச்சமும் பரவி எதிரே வருவோரின் கண்களைப் பறிக்கிறது.எனவே இனியாவது அனைத்து வாகனங்களின் ஹெட்லைட்களில் கருப்பு ஸ்டிக்கரானது கட்டாயம் ஒட்டப்பட வேண்டும் என நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில்ஓடும் அனைத்து வாகனங்களிலும் சில காலத்திற்கு முன்பெல்லாம் ஹெட்லைட்டுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இந்த கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதால் அந்த வெளிச்சமானது கட்டுப்படுத்தப்பட்டு எதிரே பரவுவதால் எதிரே வாகனங்களில் வருவோருக்கும் எந்தவிதத்திலும் இது பாதிப்பினை ஏற்படுத்தாது.
ஆனால் தற்போது அந்த நடைமுறையினை போக்குவரத்துதுறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் ஆகியோர் காற்றில் பறக்கவிட்டுவிட்டதால் தமிழகத்தில் ஓடும் அனைத்து வாகனங்களிலும் நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக பிரகாசமான எல்இடி ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ஒருசில டூவீலர்களில் இரண்டு ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளதையும் காண முடிகிறது. இதுபோன்ற நவீன ஹெட்லைட்களின் வெளிச்சத்தால் சாதாரணமாக ரோட்டில் நடந்து செல்பவர்கள்முதல் வாகனங்களில் செல்பவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கண்கூச்சத்தால் பாதிப்படைகின்றனர். பவர்புல் வெளிச்சத்தினால் எதிரே என்ன வாகனம் வருகறிது என உடனடியாக அவர்களால் தீர்மானிக்க முடியாமல் ஒரு சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது-
அதுவும் தற்போதுதங்க நாற்கர சாலையில் தடுப்புச்சுவர் இருந்தாலும் தொலைதுாரத்திலிருந்து வரும் வாகனத்தின்வெளிச்சத்தில் எதிரே செல்லும் வாகனங்களின் நிலை தடுமாறும் சூழ்நிலையே உள்ளது. இருந்தாலும் போக்குவரத்துத்துறை விதிகளின் படி ஒரு வாகனம் செல்லும்போது எதிரே வாகனங்கள் வந்தால் ஹெட்லைட் டினை ’’டிப்’’ செய்ய வேண்டும்.
குறைந்த பட்சம் இருமுறையாவது செய்ய வேண்டுமென்பது சட்டம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே வாகன ஓட்டிகளின் விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. தமிழகத்தினைப் பொறுத்தவரை அனைத்து வாகனங்களிலுமே கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது. தற்போது ரோடுகள் உள்ள நிலைமையில் எதிரே வருபவர்கள் நிலை தடுமாற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
சாலைபாதுகாப்பு வார விழா
ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படும்போது மட்டும் அதிகாரிகள் உட்பட போக்குவரத்து போலீசார் உள்ளிட்டவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் விதமாகஅந்த சில நிமிடங்கள் மட்டும் அந்த வழியாக வரும் வாகனங்களின் ஹெட்லைட்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி வாகன விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நோட்டீசை வழங்குவார்கள். ஆனால் நிஜம் என்னவென்றால் அந்த விழிப்புணர்வு அனைத்துமே அந்த ஒரு நாள் மட்டுந்தான். அடுத்த நாள் கூட ஃபாலோ செய்யப்படுவதில்லை.
தமிழகத்தில் ஓடும் பல வாகனங்கள் ஹெட்லைட் சரிவர எரியாமலேயே ரோடுகளில் ஓடுகின்றன.சின்ன சின்ன கலர்லைட் வெளிச்சத்தினை மட்டுமே போட்டு செல்வதால் எதிரில் என்ன வாகனம் வருகிறது என்பது எதிரே வருபவர்களுக்கு சரிவர தெரிவதில்லை. இதனால் நிலை தடுமாறும் சூழலுக்கு ஆட்படுகின்றனர்.
நடவடிக்கை தேவை
தற்போது புதிய வாகன விதிமுறைகளை அனுசரிக்காவிட்டால் அனைத்திற்கும் அபராதம் போடும் போலீசார் இதனையும் சற்று கண்டுகொண்டால் விபத்துகள் குறைய அதிக வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக அனுசரித்து செல்கின்றனரா? என அவ்வப்போது போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு விதிமுறைகளை அனுசரித்து செல்லாத வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்க வேண்டும்.
அதுவும் கருப்புஸ்டிக்கர் ஒட்டப்படாத ஹெட்லைட்டோடு வரும் வாகனங்களையும் சோதனை செய்து அவ்வாறு கருப்புஸ்டிக்கர் ஒட்டப்படாத வாகனங்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழிப்புணர்வு தேவை
தற்போது மார்க்கெட்டில் வெளிவரும் புது வாகனங்களிலேயே கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர் வாடிக்கையாளர்கள். எனவே போக்குவரத்துத்துறை அதிகாரிகள் டீலர்கள் மற்றும் வாகன விற்பனையாளர்களுக்கு முறைப்படி கடிதம் அனுப்பி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம் ஆகும்.
அதேபோல் ஹெட்லைட் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களும் இது குறித்து அறிந்துகொள்ள அவர்களுக்கும் எல்லோர் வாகனங்களின் முகப்பில் கருப்பு ஸ்டிக்கர் கட்டாயம் ஒட்டப்பட வேண்டும் என்ற அறிவிப்பினையும் கால அவகாசம் கொடுத்து அறிவிக்க வேண்டும்.
இதற்கான கெடு தேதி முடிந்ததும் சாலை பாதுகாப்பு விதிகளை அனுசரித்து செல்லாத வாகனஓட்டிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிப்படைந்து வரும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.