இந்தியா வந்தடைந்த பிரான்சில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்

துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் நிகரகுவா நாட்டிற்கு சென்றுகொண்டிருந்த விமானம் மனித கடத்தல் புகாரின் காரணமாக பிரான்சில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது;

Update: 2023-12-26 02:58 GMT

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிகரகுவா நாட்டிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் பயணித்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது.

இதனிடையே, துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகவும், தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளதா? என்பதை சரிபார்ப்பதற்காகவும் செல்லும் வழியில் பிரான்ஸ் நாட்டின் வட்ரே நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அப்போது, துபாயில் இருந்து ஒரு விமானத்தில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நிகரகுவா நாட்டிற்கு செல்வது குறித்து சந்தேகமடைந்த பிரான்ஸ் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

4 நாட்களாக நடந்த விசாரணைக்கு பின் விமானத்தில் பயணித்த அனைவரும் உரிய அனுமதி பெற்றதும், மனித கடத்தல் நடைபெறவில்லை என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து பிரான்சில் இருந்து விமானம் புறப்பட நீதிமன்றம் அனுமதியளித்தது. அதேவேளை, விமானத்தில் பயணித்த பயணிகளில் 25 பேர் பிரான்சில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, மீதமுள்ள பயணிகளுடன் விமானம் நிகரகுவா நாட்டிற்கு புறப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் தரையிறக்கப்பட்ட விமானம் நிகரகுவா நாட்டிற்கு செல்லாது என்றும் விமானம் இந்தியாவுக்கு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 276 இந்தியர்களுடன் பிரான்சின் வட்ரே விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட விமானம் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்தியா வந்தது. மும்பை வந்த பயணிகளுடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News