தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 38 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் 2022-23 ஆம் நிதியாண்டில் 38 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது;
தூத்துக்குடி வ.உ.சி.துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம் 2022-23 ஆம் நிதியாண்டில் மேற்கொண்ட சாதனைகள் குறித்து துறைமுக ஆணையர் ராமச்சந்திரன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் கடந்த நிதியாண்டு 2022-23-ல் 38.04 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. 2021-22 நிதியாண்டில் கையாளப்பட்ட 34.12 மில்லியன் டன் சரக்குகளை விட 11.5 சதவீதம்கூடுதலாகும். இறக்குமதியை பொறுத்தவரையில் 28.30 மில்லியன் டன்களும், ஏற்றுமதியை பொறுத்தவரையில் 8.95 மில்லியன் டன்களும் மற்றும் சரக்குபரிமாற்றத்தின் மூலம் 0.49 மில்லியன் டன்களையும் கையாண்டுள்ளது. கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் 2022-23 நிதியாண்டிற்கு நிர்ணயம் செய்த அளவான 36.00 மில்லியன் டன் சரக்கினை 14.03.2023 அன்றே கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிதிநிலை செயல்பாடு
2022-23 நிதியாண்டில் மொத்த வருவாய் இதுவரை கண்டிராத அளவில் தோராயமாக ரூபாய் 816.17 கோடி (2021-22 நிதியாண்டு ரூபாய் 654.52 கோடி) வளர்ச்சி விகிதம் 25 சதவிகிதம் ஆகும். 2022-23 நிதியாண்டு இயக்க வருவாய் தோராயமாக ரூபாய் 733.27 கோடி (2021-22 நிதியாண்டு ரூபாய் 596.81 கோடி) வளர்ச்சி விகிதம் 23 சதவிகிதம் ஆகும்.
2022-23 நிதியாண்டு வரி பிடித்ததற்கு பின்பு உள்ள நிகர உபரி வருவாய் ரூபாய் 256.14 கோடி (2021-22 நிதியாண்டு ரூபாய் 136.80 கோடி) வளர்ச்சி விகிதம் 87 சதவிகிதம் ஆகும். இயக்க விகிதாச்சாரம் 41 மூ வளர்ச்சி அடைந்துள்ளது, இந்திய துறைமுகங்களில் தலைசிறந்த நிர்வாக திறனை சுட்டிக்காட்டுகிறது.
செயல்பாட்டு திறன்
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் சரக்கு கையாளும் செயல்திறனை பொறுத்தவரையில், கடந்த நிதியாண்டு 2022-23 கப்பல்கள் தளத்திற்காக காத்திருக்கும் சராசரி நேரமானது 46.80 மணி நேரமாகும் (2021-22 நிதியாண்டு 48.48 மணி நேரம்). சரக்குபெட்டக கப்பல்கள் தளத்திற்காக காத்திருக்கும் சராசரி நேரமானது 18.24 மணி நேரமாகும் (2021-22 நிதியாண்டு 22.32 மணி நேரம்) கப்பல் இருந்து சரக்குகள் கையாளாமல் இருக்கும் நேரம் 2021-22 நிதியாண்டில் 15.93 சதவிகிலிருந்து 2022-23 நிதியாண்டு 13.01 சதவிகிதமாக குறைந்துள்ளது துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் அதிகரிப்பை சுட்டி காட்டுகிறது.
குறிப்பிடத்தக்க சாதனைகள்
13.05.2022 அன்று 300 மீட்டர் நீளமுடைய மிக பெரிய சரக்குபெட்டக கப்பலான எம்.வி. எம்.எஸ்.சி. பெட்ரா என்ற கப்பலை கையாண்டு இதற்கு முன்பு 20.03.2022 அன்று கையாளப்பட்ட 277 மீட்டர் நீளமுடைய சரக்குபெட்டக கப்பலான எம்.வி. எம்எஸ்சி விதி என்ற கப்பலை விட பெரிய கப்பலை கையாண்டு சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
292 மீட்டர் நீளமும், 45.05 மீட்டர் அகலமும் கொண்ட 1,80,000 டன் கொள்ளளவு உடைய மிகபெரிய கேப் வகை கப்பலை 26.05.2022 அன்று கையாண்டுள்ளது. 27.10.2022 அன்று ஒரே இறக்குமதி கப்பலில் 120 காற்றாலை இறகுகளை கையாண்டு இதற்கு முன்பு இறக்குமதி செய்த 60 காற்றாலை இறகுகளை விட அதிகமாகும்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரே மாதத்தில் 36.81 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் கையாண்ட அளவான 36.76 லட்சம் டன் சரக்குகளை விட அதிகமாக கையாண்டு சாதனை புரிந்தது. 05.02.2023 அன்று ஒரே நாளில் 1,94,136 டன் சரக்குகளை கையாண்டு இதற்கு முன்பு 11.07.2022-ல் ஒரே நாளில் கையாண்ட 1,93,683 டன் சரக்குகளை விட அதிகமாக கையாண்டு சாதனை புரிந்தது.
2022-23 நிதியாண்டு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 12.77 மில்லியன் டன் உள்நாட்டு சரக்குகளை கையாண்டு 2021-22 நிதியாண்டு கையாண்ட அளவான 10.55 மில்லியன் டன் உள்நாட்டு சரக்குகளை விட அதிகமாக கையாண்டுள்ளது. இந்த நடப்பு நிதியாண்டில் பொருளாதார மீட்சியின் நேர் போக்கைக் கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டில் அதிகளவில் சரக்குகளை கையாண்டு பல்வேறு சாதனை புரியும்.
மேலும், துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகள் அமைப்பதற்கான கணக்கிடப்பட்ட மூலதனச் செலவினத்தில் 101.12 சதவீதம் அடைந்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தச் சிறப்புமிக்க சாதனையை புரிய அயராது சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கும் அனைத்து துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், துறைமுக தொழிற்சங்கங்கள், சரக்கு பெட்டகங்க முனையங்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ராமச்சந்திரன் தெரிவித்தார்.