தமிழகத்தில் தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளித்து உத்தரவு
பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு, காரம் விற்கும் கடைகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது-பார்சலில் மட்டுமே விற்க அனுமதி
தமிழகத்தில் நாளை (ஜூன் 14) முதல் 21ம் தேதி வரை புதிய தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளது. இதை அடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புதிய அறிவிப்பாக பாதிப்புகள் குறைவாக காணப்படும் 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சில தளர்வுகள் அறிவித்து ஊரடங்கு கட்டப்படுகளை வருகிற 21 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் பாதிப்புகள் அதிகமாக காணப்படும் கோவை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் குறைந்த தளர்வுகளை அறிவித்து பாதிப்புகள் குறைவாக காணப்படும் மீதமுள்ள 27 மாவட்டங்களில் அதிக அளவில் தளர்வுகள் அளித்து உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி பாதிப்புகள் குறைவாக காணப்படும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக், அழகு நிலையம், சலூன் போன்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. இதை அடுத்து தேநீர் கடை உரிமையாளர்கள் பொதுமுடக்கம் காரணமாக தேநீர் கடை பணியாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இதை கருத்தில் கொண்டு பாதிப்புகள் குறைந்து வரும் மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனை பரிசீலினை செய்த தமிழக அரசு நாளை (ஜூன் 14) முதல் பாதிப்பு குறைந்து வரும் 27 மாவட்டங்களில் தேநீர் கடைகள் இயங்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் தேநீர் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மே 24 மாதம் மூடப்பட்ட தேநீர் கடைகள் நாளை முதல் திறக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு, காரம் விற்கும் கடைகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இனிப்பு, கார வகை கடைகள் இயங்கலாம். இனிப்பு, கார வகைகளை பார்சலில் மட்டுமே விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது