சிட்கோ,தாய்கோ வங்கிகளுடன் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் 2 புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிட்கோ நிறுவனத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொழில் மனைகளை, தொழில் முனைவோர்கள் காலதாமதமின்றி விரைந்து பெற்றலாம்.;

Update: 2021-12-09 08:26 GMT

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மாநில பொருளாதாரத்தின் வளர்ச்சி இயந்திரமாகவும் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம், புதுமையை புகுத்துதல் மற்றும் சமச்சீர் வட்டார வளர்ச்சி முதலானவைகளுக்கு பெரும் பங்காற்றுகின்றன.

இந்நிறுவனங்களை மேம்படுத்திடவும், அவற்றின் வளர்ச்சிக்கு உதவிடும் பொருட்டு தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அளவில் முதன்மை மேம்பாட்டு நிதி நிறுவனமான TIIC நிறுவனம் கடந்த 1949 முதல் அதன் வளர்ச்சியில் தனது சேவையினை வழங்கி வருகிறது.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் நேற்று தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகமானது, சிட்கோ நிறுவனம் மற்றும் தாய்கோ வங்கியுடன் முறையே தொழில்துறை உள்கட்டமைப்பு முன்னெடுப்பு திட்டத்தின் இலகுவான செயலாக்கத்திற்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவிடுவதற்காக இணை கடன் வழங்கிடவும் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி,

மாநிலத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவிடும் வண்ணம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமானது

"தொழில் துறை உள்கட்டமைப்பு முன்னெடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிப்காட் மற்றும் சிட்கோ நிறுவனங்களிலிருந்து தொழில் மனைகளை பெறும் தொழில் நிறுவனங்களுக்கு இடைக்கால கடன் உதவி வழங்கப்படும். இதன் மூலம் சிட்கோ நிறுவனத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொழில் மனைகளை தொழில் முனைவோர்கள் காலதாமதமின்றி பெற்று விரைந்து தங்களது தொழிற்சாலைகளை நிறுவ முடியும்.

தாய்கோ வங்கியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, மாநிலத்தில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் போதுமான நடைமுறை மூலதனத்துடன் செயல்படும் வகையில், தாய்கோ வங்கி மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஆற்றலை பயன்படுத்தி, மாநிலத்தில் குறு, சிறு மற்றும், நடுத்தர நிறுவன சூழலினை திறம்பட வளர்த்திடும். பொருட்டு, இவ்விரு நிறுவனங்களும் இணை கடன் நடவடிக்கைகளில் ஈடுபடும். இதனால் மாநிலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கால கடனுக்கான நிதி உதவியுடன், எளிதாக நடைமுறை மூலதனத்தினையும் வழங்கிட வழிவகை செய்யப்படுகிறது.


இந்நிகழ்வின் போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஹன்ஸ் ராஜ் வர்மா, தொழில் துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி. அருண் ராய், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிகி தாமஸ் வைத்யன் மற்றும் மேலாண்மை இயக்குநர் கோ.குப்புராஜ், தாய்கோ வங்கி கிருபாகரன், பொது மேலாளர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு சிட்கோ பொது மேலாளர் செல்வி பேபி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News