zoho-தமிழக சோகோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்புவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
ஊரகப் பகுதிகளில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்புவின் பங்கு முக்கியமானது -பிரதமர் நரேந்திரமோடி
இந்தியக் கோடீஸ்வர தொழிலதிபர்களில் ஒருவரும், பன்னாட்டு நிறுவனமான சோகோ(zoho) நிறுவனத்தின் நிறுவனத் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமாக விளங்குபவர் ஸ்ரீதர் வேம்பு. 2020-இல் இந்தியப் பணக்காரர்களில் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை கொண்ட 55வது நபர் என ஸ்ரீதர் வேம்புவை போர்ப்ஸ் இதழ் பாராட்டியது குறிப்பிட தக்கது.
இந்நிலையில் அகில இந்திய வானொலியில் நேற்று ஒலிபரப்பான மக்களிடையே மனம் திறந்து பேசும் மன்-கி-பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ஊரகப் பகுதிகளில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
கல்வி, நிதி மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் உருவாகி வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், புதிய இந்தியாவின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமர் தமது உரையில் கூறியதாவது :
நாட்டின் சிறிய கிராமங்களிலிருந்தும், தொழில் முனைவோர்கள் உருவாகி வருகின்றனர். ஊரகப் பகுதிகளில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு முக்கிய பங்கு வகிக்கிறார்.
தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர் தாரகைகள் கைவினைப் பொருட்கள் விற்பனை அங்காடி என்ற பெயரில் நடத்தி வரும் கடையில் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் பொம்மை, வெண்கல விளக்கு மட்டுமின்றி, செயற்கை நகைககள் மற்றும் தரை விரிப்புகள் உள்ளிட்ட இதர பொருட்களையும் சிறப்பாக விற்பனை செய்து வருகின்றனர்.
புவிசார் குறியீடு கொண்ட கைவினைப் பொருட்களின் விற்பனை மூலம், கைவினைக் கலைஞர்கள் மற்றும் பெண்களின் வருவாயும் அதிகரிப்பதுடன், அவர்களுக்கு அதிகாரப் பங்களிப்பும் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டார்.