ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேடிஎம்

பேடிஎம் நிறுவனத்தின் அலுவலகங்களிலும் பணியாற்றும் சுமார் 1000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2023-12-25 12:46 GMT

Paytm Layoffs-பேடிஎம் (கோப்பு படம்)

பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களிலும் பணியாற்றும் சுமார் 1000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நிதிச் சேவையை வழங்கும் நிறுவனமான பேடிஎம், நிதி ஆதாரங்கள் பெருகாததால், கடந்த ஒரு சில மாதங்களாக செலவினக் குறைப்பு நடவடிக்கையை திட்டமிட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில், நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்களுக்கான வழிமுறைகளை ஆர்பிஐ கடுமையாக்கியதைத் தொடர்ந்து, பொருளை வாங்கிக்கொண்டு பிறகு பணம் செலுத்துவது உள்ளிட்ட சிறிய கடன் சேவைகளை பேடிஎம் நிறுத்திக்கொண்ட நிலையில், ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், புதிதாகத் தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களில் இந்த ஆண்டு நடக்கும் மிகப்பெரிய பணிநீக்கமாக இது பார்க்கப்படுகறிது.

கடந்த சில ஆண்டுகளாக, புத்தாக்க தொழில் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் நிதி ஆதாரம் குறைந்து போயிருக்கும் நிலையில், புதிதாகத் தொடங்கிய நிறுவனங்கள் சில ஆள்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடங்கியிருப்பது, புதிதாக தொழில் தொடங்கும் அளவை பாதிக்கும் என்ற சந்தேகமும் எழுகிறது.

புதிய நிறுவனங்கள் பல 2023ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 28 ஆயிரம் ஊழியர்களை நீக்கியிருக்கிறது. இதுவே கடந்த 2022ல் 20 ஆயிரமாகவும், 2021ல் 4,080 ஆகவும் இருந்துள்ளது.

விஜய் ஷேகர் ஷர்மாவால் நிறுவப்பட்ட பேடிஎம் போஸ்ட்பெய்ட், 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான கடன்களை வழங்கி வருகிறது. ஆனால், வழிகாட்டு நெறிமுறைகள் மாறியதால், அவை நிதி மேலாண்மை மற்றும் காப்பீட்டு தரகு துறைகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன.

இது குறித்து நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் வகையிலும், செயல்திறனை அதிகரிக்கவும், தொடர்ச்சியாகச் செய்யப்படும் செயல்களை எல்லாம், செயற்கைப் நுண்ணறிவு (ஏஐ) பயன்படுத்தி ஆட்டோமேஷன் முறையில் மாற்றிவிட்டோம். இதனால், பணி இல்லாத ஆபரேஷன், விற்பனை, பொறியியல் துறைகளில் இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளோம். இதன் மூலம் செலவினம் 10 - 15 சதவீதம் குறையும் எனத் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், வரும் ஆண்டில் சுமார் 15,000 பணியாளர்களை பணியமர்த்துவதன் மூலம் அதன் முக்கிய கட்டண வணிகத்தை வலுப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News