சலுகையில் இலங்கையில் விசைத்தறி அமைக்கலாம்: விசைத்தறி சம்மேளனத்தலைவர்
இலங்கை அரசு, ஜவுளி ஏற்றுமதிக்கு பல்வேறு சலுகைகளுடன் உதவுவதாக, விசைத்தறி சம்மேளன தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விசைத்தறி சங்கத்தின் சார்பாக, இலங்கை அரசின் அழைப்பின் பேரில் விசைத்தறி துணி ஏற்றுமதியாளர்கள் தமிழ்நாடு விசைத்தறி சம்மேளன தலைவர் மதிவாணன் தலைமையில், சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில், இலங்கை தூதரக கமிஷனர் டாக்டர் வெங்கடேஸ்வரனை சந்தித்தனர்.
இது குறித்து, தமிழ்நாடு விசைத்தறி சம்மேளன தலைவர் மதிவாணன், குமாரபாளையத்தில் கூறியதாவது: இலங்கையில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி பெருமளவில் உள்ளது. அவர்களுக்கு தேவையான துணிகள் அங்கு தயாரிக்கப்படுவதில்லை. பலநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் இலங்கைக்கு அனுப்பலாம். இலங்கையிலேயே விசைத்தறி கூடங்களை நிறுவி துணிகளை தயார் செய்யலாம். நெய்யப்படும் துணிகளை பிராசசிங் செய்வதற்கு பெறும் வசதிகள் இலங்கையில் இருக்கிறது. பிராசசிங் செய்த ஆடைகளை மக்கள் உடுத்தும் உடைகளாக சேலை, துண்டு, சர்ட்டிங், சுடிதார் ஆகியவைகளை ஏற்றுமதி செய்யலாம். அதற்கான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
தொழிற்சாலை அமைக்க தேவையான நிலம் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு இலங்கை அரசு சார்பாக மானியம் கிடைக்கும். அங்கு வேலை செய்ய வருபவர்களுக்கு குடியிருப்பு விசா மற்றும் வரி இல்லாமல் இயந்திரங்கள் மாற்று கச்சாப் பொருட்கள் இறக்குமதி வருமானவரியில் இருந்து முழு விலக்கு தரப்படும். யாழ்பாணம், மாத்தளை போன்ற இடங்களில் புதிய விமான நிலையங்கள் வர உள்ளதால், இரண்டு புதிய துறைமுகங்களும் ஏற்படுத்த இலங்கை தூதரக கமிஷனர் டாக்டர் வெங்கடேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு மதிவாணன் கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு விசைத்தறி சம்மேளன செயலர் கோவை வித்யா சாகர், பள்ளிபாளையம் கருணாநிதி, சங்கரன்கோவில் சுப்பிரமணியம், மேச்சேரி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கந்தவேல், மேச்சேரி நெசவாளர்கள் நல சங்க தலைவர் பிரபாகரன் மற்றும் சோமனூர், பல்லடம், கருமத்தம்பட்டி, அவினாசி, பொதட்டூர் பேட்டை, அருப்புகோட்டை, குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.
விசைத்தறி தொழில் நலிந்து கொண்டிருந்த நிலையில், இப்படிப்பட்ட ஆதரவு கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, இலங்கை தூதரக கமிஷனர் டாக்டர் வெங்கடேஸ்வரனுக்கு அனைவரும் நன்றி தெரிவித்து கொண்டனர்.