இன்ஃபோசிஸ் தலைவர் மோஹித் ஜோஷி ராஜினாமா
இன்ஃபோசிஸ் தலைவர் மோஹித் ஜோஷி, போட்டியாளரான டெக் மஹிந்திராவுடன் இணைவதற்காக நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்
இன்ஃபோசிஸ் தலைவர் மோஹித் ஜோஷி, போட்டியாளரான டெக் மஹிந்திராவுடன் இணைவதற்காக நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக இரு நிறுவனங்களும் பங்குச் சந்தையில் தெரிவித்துள்ளன. 2000 ஆம் ஆண்டு முதல் இன்ஃபோசிஸின் ஒரு பகுதியாக இருந்த மோஹித் ஜோஷி, டெக் மஹிந்திராவின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில், மோஹித் ஜோஷி மார்ச் 11 முதல் விடுப்பில் இருப்பார் என்றும், நிறுவனத்துடனான அவரது கடைசி தேதி ஜூன் 9, 2023 ஆகும் என்றும் இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்ஃபோசிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அடுத்த தலைமுறை டிஜிட்டல் சேவைகள் மற்றும் ஆலோசனையில் உலகளாவிய முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ், இன்று தலைவர் மோஹித் ஜோஷி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மார்ச் 11, 2023 முதல் அவர் விடுப்பில் இருப்பார் மற்றும் நிறுவனத்துடனான அவரது கடைசி தேதி ஜூன் 09, 2023 ஆகும். மோஹித் ஜோஷியின் சேவைகளுக்காகவும், நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும் தங்களின் ஆழ்ந்த பாராட்டுகளை இயக்குநர்கள் குழு பதிவு செய்தது. இது உங்கள் தகவல் மற்றும் பதிவுகளுக்காக" என்று தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றவ மோஹித் ஜோஷி, இன்ஃபோசிஸில் நிதிச் சேவைகள் மற்றும் உடல்நலம்/வாழ்க்கை அறிவியல் வணிகங்களைக் கையாண்டார். அவர் எட்ஜ்வெர்வ் சிஸ்டம்ஸ் லிமிடெட்டின் தலைவராகவும் இருந்தார் மற்றும் நிறுவனத்தின் உலகளாவிய வங்கித் தளமான ஃபினாக்கிளை உள்ளடக்கிய மென்பொருள் வணிகத்தை வழிநடத்தினார்.
மோஹித் ஜோஷி 2014 இல் உலகப் பொருளாதார மன்றத்தில் குளோபல் யங் லீடர் திட்டத்திற்கு அழைக்கப்பட்டார். அவர் பிரிட்டிஷ் தொழில்துறை கூட்டமைப்பின் பொருளாதார வளர்ச்சி வாரியத்தின் துணைத் தலைவராகவும், இளம் தலைவர்கள் அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற திரு ஜோஷி, இதற்கு முன்பு ANZ கிரிண்ட்லேஸ் மற்றும் ஏபிஎன் அம்ரோவுடன் அவர்களது கார்ப்பரேட் மற்றும் முதலீட்டு வங்கியில் பணிபுரிந்துள்ளார்.