ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி நஷ்டம். அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்
சென்செக்ஸ் குறியீடு 537.27 புள்ளிகள் உயர்ந்து அதிகப்படியாக 71,960.92 புள்ளிகளை எட்டிய நிலையில் வர்த்தக முடிவில் 70,370.55 புள்ளிகளுக்குச் சரிந்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் காரணத்தால் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை பங்குச்சந்தை மூடப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தைத் துவங்கும் போது ஏற்றதுடன் துவங்கப்பட்டாலும், வர்த்தகம் முடியும் போது பெரும் சோகத்துடனும், நஷ்டத்துடனும் வர்த்தகம் முடிந்துள்ளது.
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் வரலாற்றில் முதல் முறையாக இந்தியப் பங்குச் சந்தையின் மொத்த மதிப்பு ஹாங்காங் பங்குச்சந்தையை முந்தியிருந்தது. ஆனால் சீனா அரசின் அறிவிப்பால் பங்குச்சந்தை பெரும் இழப்பை எதிர்கொண்டு உள்ளது.
இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 537.27 புள்ளிகள் உயர்ந்து அதிகப்படியாக 71,960.92 புள்ளிகளை எட்டியுள்ளது. ஆனால் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1053.10 புள்ளிகள் குறைந்து 70,370.55 புள்ளிகளுக்குச் சரிந்துள்ளது. இதன் மூலம் இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் 1800 புள்ளிகளை இழந்துள்ளது,
வர்த்தக முடிவில் இன்றைய உச்சத்தில் இருந்து 1668.65 புள்ளிகளை இழந்துள்ளது. மேலும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன் பார்மா, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், பஜாஜ் பைனான்ஸ், டிசிஎஸ் ஆகியவை மட்டுமே உயர்வுடன் உள்ளது. மற்ற அனைத்து நிறுவனங்களும் பெரும் சரிவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிஃப்டி குறியீடு 333.00 புள்ளிகள் குறைந்து 21,238.80 புள்ளிகளை எட்டியுள்ளது. தேசிய பங்குச்சந்தையில் பார்மா மற்றும் ஹெல்த்கேர் குறியீடுகள் தவிர அனைத்து துறைகளும் பெரும் சரிவை சந்தித்து. இன்று ஒரு நாள் மட்டும் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு மதிப்பை இழந்துள்ளனர்.
வங்கி பங்குகள்: ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் உடன் சேர்த்து அனைத்து வங்கி பங்குகளும் அதிகளவில் சரிந்துள்ளது. நிஃப்டி வங்கி குறியீடு 2 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. IDFC First Bank பங்குகள் 6.5 சதவீதம் வரையில் சரிந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுக் காத்திருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு நினைத்த படியே பெரிய பாதிப்பு உருவானது. இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.
சீன அரசு அமைப்பின் தலைமை அதிகாரி தலைமையில் நேற்று அந்நாட்டு பங்குச்சந்தை சரிவைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பின்பு ஹாங்காங் சந்தையில் 2 டிரில்லியன் யுவான், சீனா பங்குச்சந்தையில் 300 பில்லியன் யுவான் தொகையை முதலீடு செய்யும் அறிவிப்பு வெளியானது.
அன்னிய முதலீட்டாளர்கள்: சர்வதேச முதலீட்டாளர்கள் சீன பங்குச்சந்தை மோசமான சரிவை எதிர்கொண்டு வருவதால் இந்தியா பங்குச்சந்தைக்கு அதிகப்படியான முதலீட்டை இடம் மாற்றிய நிலையில், இன்று சீன அரசின் முடிவைத் தொடர்ந்து பெரும் பகுதி முதலீடு மீண்டும் சீன சந்தைக்கே சென்றுள்ளது.