மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
X

மக்காச்சோளப் பயிர்

நடப்பு ஆண்டில் விவசாயிகள் மக்காச்சோளப்பயிரில் நல்ல விளைச்சல் எடுக்க வேளாண்மை உழவர் நலத்துறை காட்டும் வழிமுறைகள்.

மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:

பயிர்களில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி, விளைச்சலை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாட்டின் உணவுதானிய உற்பத்தியில் மிக முக்கிய பங்காற்றும் மக்காச்சோளப்பயிரானது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 3.40 இலட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இறவை மற்றும் மானாவாரி பயிராக 25 மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வரும் மக்காச்சோளப்பயிரானது குறைந்த நாட்களில் அதிக இலாபம் தரக்கூடிய பயிர் என்பதால், விவசாயிகள் மக்காச்சோளத்தை அதிகளவு விரும்பி சாகுபடி செய்து வருகின்றனர். நடப்பு 2021-22 ஆம் ஆண்டில் இதுவரை 3.66 இலட்சம் எக்டரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு படைப்புழு தாக்குதல் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. வேளாண்மைத்துறையால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகள் வாயிலாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மக்காச்சோளப்பயிரில் படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டு, எக்டருக்கு சராசரியாக 8 மெட்ரிக் டன்கள் வரை விளைச்சல் பெறப்பட்டு வருகிறது. எனினும் படைப்புழுவானது 80 வகையான பயிர்களை உண்டு வாழும் தன்மை உடையதால், இதனை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து பல்வேறு பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து மாநில அளவிலான பயிற்சி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் 08.07.2021 அன்று காணொலிக்காட்சி வாயிலாக வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு நடத்தப்பட்டது. மேலும், இடுபொருள் விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கும் உரிய விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு எக்டருக்கு ரூ.2,500 மதிப்புள்ள பவேரியா பேஸியானா கொண்டு விதை நேர்த்தி, வேம்பு சார்ந்த தாவரப் பூச்சிக்கொல்லிகள் மற்றும் இனக்கவர்ச்சிப் பொறிகள் விநியோகம் போன்ற பணிகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.20 கோடி ஒதுக்கி, பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது மக்காச்சோளப் பயிரானது விதைப்பு நிலை முதல் அறுவடை நிலை வரை பல்வேறு நிலைகளில் உள்ளதால் விவசாயிகள் அனைவரும்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளவேண்டிய ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய விபரம் பின்வருமாறு:

அ) விதைப்புக்கு முன் கடைபிடிக்கப்பட வேண்டிய உத்திகள்.

கோடை உழவு செய்தல்

கடைசி உழவு செய்யும் பொழுது ஒரு எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு மண்ணில் இடுதல் விதை நேர்த்தி செய்தல் ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு 10 கிராம் பவேரியா பேசியானா நுண்ணுயிர் பூச்சிக்கொல்லி (அல்லது) 10 கிராம் தயோமீதாக்சம் 30 சதம் எப்.எஸ் (FS) (அல்லது) 6 மிலி சயான்டிரினிபுரால் 19.8 % + தயோமீதாக்சம் 19.8% எப்.எஸ் (FS) கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதன் மூலம் புழுக்கள் அதன் இளம் பருவத்திலேயே கட்டுப்படுத்தப்படும் என்பதால்,இப்பூச்சியின் தாக்குதலை 15-20 நாட்கள் வரை பரவாமல் தடுக்க இயலும்.

ஒரே சமயத்தில் விதைப்பு மற்றும் பயிர் இடைவெளி பராமரிப்பு: இறவை பயிருக்கு வரிசைக்கு வரிசை 60 செ.மீட்டரும், பயிருக்கு பயிர் 25 செ.மீட்டரும், மானாவாரி பயிருக்கு வரிசைக்கு வரிசை 45 செ.மீட்டரும் பயிருக்கு பயிர் 20 செ.மீட்டரும் இடைவெளி பாரமரிப்பது மிகவும் அவசியமாகும். 10 வரிசைக்கு ஒரு வரிசை 75 செ.மீ இடைவெளி விட வேண்டும். தட்டைப்பயறு, சூரியகாந்தி, எள். சோளம், சாமந்தி பயிர்களை வரப்புப் பயிராகவும், உளுந்து, பாசிப்பயறு வகைப் பயிர்களை ஊடு பயிராகவும் பயிரிட்டால் , படைப்புழுவின் தாக்குதலை எளிதில் கண்டறிய முடியும்.

ஆ) விதைத்த பின் கடைப்பிடிக்கப்பட வேண்டிய உத்திகள்:

இனக்கவர்ச்சிப் பொறிகள் எக்டருக்கு 12 எண்கள் வைத்து பூச்சி நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். முட்டைக் குவியல்கள் மற்றும் இளம் புழுக்களை கைகளால் சேகரித்து அழிக்கலாம்.

படைப்புழு தாக்குதல் பொருளாதார சேதநிலை அடையும் நிலையில் அதாவது வயல்களில் 5 சதவீதத்திற்கு மேல் படைப்புழு தாக்குதல் தெரிய வந்தால், வேம்பு சார்ந்த தாவரப் பூச்சிக்கொல்லியான அசாடிராக்டின் 1500 பிபிஎம் ஒரு லிட்டர் தண்ணீ ருக்கு 5 மிலி. (அல்லது) அசாடிராக்டின் 1% ஒரு லிட்டர் தண்ணீ ருக்கு 2 மிலி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம் (அல்லது) 5% வேப்பங்கொட்டைக் கரைசல் (Neem Seed Kernel Extract) தெளிக்கலாம். தாக்குதல் 10 சதவீதத்தைத் தாண்டும் பட்சத்தில், ஏக்கருக்கு 1 கிலோ வீதம் மெட்டாரைசியம் அனிசோபிலே அல்லது பவேரியா பாசியானா என்ற உயிரி பூச்சிக்கொல்லியை தெளிக்கலாம். (அல்லது) தேவை ஏற்பட்டால், பரிந்துரைக்கப்படும் இரசாயன பூச்சி கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒன்றினை வேளாண்மை துறை அலுவலர்களின் அறிவுரையின்படி தெளிக்கலாம்.

பரிந்துரை இல்லாத இரசாயன பூச்சி மருந்துகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. தொடர்ந்து ஒரே பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு தேவையான பவேரியா, மெட்டாரைசியம் போன்ற உயிரி பூச்சிக்கொல்லிகள் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் அனைவரும் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளையும் தவறாது பின்பற்றி நடப்பு ஆண்டில் படைப்புழு தாக்குதலை முழுமையாகக் கட்டுப்படுத்தி மக்காச்சோளப்பயிரில் நல்ல விளைச்சல் எடுக்க வேண்டும் என தமிழக அரசின் வேளாண்மை உற்பத்தி ஆணையர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!