கோடைகாலத்தில் பயிர்களுக்கு ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு; இந்த வழிமுறைகளை பின்பற்றுங்க...!

கோடை கால வறட்சியில் இருந்து, பயிர்களை காப்பது எப்படி...ன்னு இனி கவலையே படாதீங்க (கோப்பு படம்)
இதுகுறித்து, கோவை வேளாண் பல்கலை பேராசிரியர்கள் ஆனந்தராஜா, குகன் ஆகியோர் கூறியதாவது,
கோடை காலங்களில் பயிர்களுக்கு ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் வெப்ப அயர்ச்சி உற்பத்தியிலும், பொருளாதார ரீதியாகவும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீர் தட்டுப்பாடு காரணமாக ஏற்படும் தாக்கம் உடனடியாக தெரிந்துவிடுகிறது. ஆனால் வெப்ப அயற்சியின் காரணமாக ஏற்படும் மாற்றம், இலைகளின் அளவு மற்றும் வடிவத்தின் வாயிலாகவும், மகசூல் குறைவதன் வாயிலாகவும் தெரிகிறது.
நீர் தட்டுப்பாட்டை போக்க மேலாண்மை செய்ய, பயிர்களுக்கு மூடாக்கு முறைகளையும் வெப்ப அயர்ச்சியை குறைக்க நீராவிபோக்கை குறைக்கும் முறைகளையும் செயல்படுத்தினால் அதிக மகசூல் கொடுக்கும். நிலப்போர்வை அல்லது மூடாக்கு அமைப்பதன் வாயிலாக நீர் ஆவியாதலை குறைத்து கிடைக்கும் நீரை பயிர்களுக்கு பயன்படுத்தலாம். மூடாக்கின் அமைப்பதால் களை கட்டுப்பாடு மற்றும் நுண்ணுயிர் பெருக்கத்தை ஏற்படுத்தி மண்ணை உயிர்ப்போடு வைத்திருக்கலாம்.
சில வேளைகளில், துணை பயனாக களைக்கட்டுப்பாட்டு செலவு குறைவதால் நீர்பற்றாக்குறை இல்லாத இடங்களில் கூட நிலப்போர்வை முறை பின்பற்றப்படுகிறது.பயிர் எச்சங்களை 5 முதல் 10 செ.மீ., தடிமன் அளவுக்கு சராசரியாக பரப்பி விடுதல் வேண்டும். இதற்கு ஹெக்டேருக்கு 5 முதல் 10 டன் என்ற அளவிற்கு பயிர் எச்சங்கள் தேவைப்படலாம். தென்னை நார்கழிவுகள், ஓலைகள், கரும்புசோகை, கரும்புச்சக்கை என கிடைக்கும் பொருட்களை வைத்து மூடாக்கு அமைக்கலாம். இவற்றை கையாள்வதற்கும், பரப்புவதற்கும் ஏற்ப சிறிய துண்டுகளாக இருப்பது அவசியம்.
நெகிழி மூடாக்கில் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களினால் தாள்கள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் தடிமன் 20 முதல் 25 மைக்ரான் வரை இருக்கும். கருப்புநிறம் கொண்ட தாள்கள், மண்ணின் வெப்பநிலையை அதிகரிக்க செய்கிறது. வெள்ளை நிற நிலப்போர்வையில் கருப்பு நெகிழி மூடாக்கைவிட வெப்பநிலை குறைவாக இருக்கும். சொட்டுநீர் குழாய்களை சரியாக வரிசைப்படுத்தி அதன் மீது போர்வையை போர்த்திய பின் அதன் ஓரங்களில் மண் அணைக்க வேண்டும். பயிரின் இடைவெளிக்கு ஏற்ப சீரான இடைவெளியில் துளைகள் இட வேண்டும். அதன்பின் நாற்று விதைகளை நடலாம். வெப்ப அயர்ச்சியை தவிர்க்க நீராவி போக்கினை கட்டுப்படுத்தியும், இலைகளில் வெப்பநிலையை மாற்றக்கூடிய திரவங்களை தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
வெப்ப அயர்ச்சியை கட்டுப்படுத்தும் திரவங்களை சமீப காலமாக மட்டுமே விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இதில் வெவ்வேறு வகையான செயல்திறன் கொண்ட திரவங்கள் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், அவற்றின் நோக்கம் வெப்ப அயர்ச்சியை கட்டுப்படுத்துவது மட்டுமே. உதாரணமாக திரவ நுண்ணுயிரான மெத்தைலோபாக்டீரியாவை காலை அல்லது மாலை வேளைகளில் இரண்டு சதவீத கரைசலை ஒரு லிட்டர் நீரில் 20 மில்லி அளவில் தெளித்து பயன்படுத்தலாம். அப்போது பச்சையத்தை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம். இதனால் மகசூல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும்.இதனை பூ மற்றும் காய் பிடிக்கும் போதும், வறட்சியான நேரங்களிலும் பயன்படுத்துவது சிறந்தது.
அதேபோல் கயோலின் என்ற மருந்து, களி மண் கலந்தது போன்று இருக்கும். இதை தண்ணீரில் 5 சதவீதம் என்ற அளவில் தெளிக்கும் போது வெப்ப நிலை மற்றும் நீராவிப்போக்கு ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டு வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu