விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் சோலார் டிரையர்
சோலார் டிரையர்.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட வாட்டாகுடி பஞ்சாயத்தில் இரண்டு விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறை மூலம் சோலார் டிரையர்கள் எனப்படும் சூரிய வெப்ப காற்று உலர்த்திகள் 50 சத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றின் விலை 470 லிருந்து 500 சதுர அடிக்கு இடுபொருள் அமைப்பதற்கான களத்துடன் மூன்று லட்சத்துக்கு வழங்கப்பட்டு 50% மானியம் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
தென்னை சாகுபடி அதிகம் மேற்கொள்ளப்பட்டுள்ள வாட்டாகுடி பஞ்சாயத்தில் முன்னோடி விவசாயிகளான முருகையன் மற்றும் பழனிவேல் ஆகியோர் சூரிய வெப்ப காற்று உலர்த்திகளை நிறுவி தென்னை கொப்பரை முதல் உளுந்து வரை மிக எளிதாக குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் பாதுகாப்பாக உலர்த்தி பயன்படுத்துகின்றனர்.
முன்னோடி விவசாயி முருகையன், 470 சதுர அடியில் தேங்காய் கொப்பரைகளை கூடாரத்தினுள் பரப்பி கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையான 44 டிகிரி சென்டி கிரேட்டில் உலர வைத்து விற்பனைக்கு அனுப்புகிறார். இதன் மூலம் ஒரு தேங்காய்க்கு இரண்டு ரூபாய் வரை கூடுதலாக லாபம் கிடைப்பதாக தெரிவித்தார். விவசாயி பழனிவேலு தேங்காய் கொப்பரை முதல் உளுந்து தானியம் வரை மிக எளிதாக உலர்த்தி எடுக்க சூரிய வெப்ப காற்றுஉலர்த்தி கூடாரங்கள் பாதுகாப்பு உள்ளதாக தெரிவித்தார்.
உளுந்து போன்ற தானியங்கள் அரை மணி முதல் ஒரு மணி நேரத்திற்குள் தேவையற்ற ஈரப்பதம் முற்றிலுமாக நீக்கப்பட்டு பாதுகாப்பாக சேமிக்க முடிகிறது என தெரிவித்தார் நல்ல வெயில் உள்ள காலங்களில் தேங்காய் கொப்பரை திறந்தவெளியில் காய வைப்பது 4 நாட்கள் எடுத்துக்கொள்ளும் பொழுது சூரிய வெப்ப காற்று உலர்த்திகள் இரண்டு நாட்களில் கொப்பறைகளை பாதுகாப்பாக தூசி இன்றி நோய்க்கிருமிகள் இன்றி குறைந்த செலவில் உலர்த்தி தருவதாக தெரிவித்தார். திறந்தவெளி களத்தில் கொப்பரைகளை உலர்த்துவதற்கு உதவிக்கான ஆட்கள் அதிகம் தேவைப்படுவதாகவும் சூரிய வெப்ப காற்று உலர்த்தியில் ஒருமுறை கொப்பறைகளை பரப்பினாலே போதும். உலர்ந்த பின் எடுத்துக் கொள்ளும் வேலை மட்டுமே என தெரிவித்தார்.
மேலும் அனைத்து வகை தானியங்களையும் தரம் மாறாமல் இதில் உலர்த்த முடியும் எனவும், மழை உள்ள காலங்களில் சூரிய வெப்ப காற்று உலர்த்திகளில் உள்ள காற்றாடி மின்சாரத்துடன் இணைக்கப்பட்டு மிகக் குறைந்த அளவு மின்சாரத்தில் குறைந்த மணி நேரத்திலேயே உலர்த்தப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
சோலார் டிரையர் எனப்படும் சூரிய வெப்ப காற்று உலர்த்திகள் வேளாண் பொறியியல் துறை மூலம் தென்னை விவசாயிகளுக்கும் நெல் விவசாயிகளுக்கும் 50% மானியத்தில் 500 சதுர அடி பரப்புக்கான கூடாரம் அமைக்க மானியம் வழங்கி வருகின்றனர். வாட்டாகுடியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய வெப்ப காற்று உலர்த்திகள் தரமான பாகங்களைக் கொண்டு சூரிய சக்தியின் மூலம் காற்று சூடாக்கப்பட்டு அதன் மூலம் கூடாரத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் உலர்த்தப்படுகின்றது. கூடாரங்களின் கூரைகள் மல்டி வால் பாலிகார்பனேட் சீட்டுகளினால் அமைக்கப்பட்டுள்ளதால் சூரிய சக்தியை இது முழுமையாக உட்கொண்டு வெப்ப வெளியேற்றத்தை தடுக்கிறது. இதன் மூலம் டிரையரின் உள்ள காற்றின் வெப்ப அளவு உயர்த்தப்படுகிறது. வெப்பநிலை கட்டுப்படுத்திட வெப்பம் மற்றும் ஈரப்பதக் கட்டுப்பாட்டு கருவி கூடாரத்தின் கதவுக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது.
விளை பொருட்களில் உள்ள ஈரம் மற்றும் எண்ணெய் பதத்தின் அளவைப் பொறுத்து காற்றின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதமானது குறிப்பிட்ட அளவில் கட்டுப்படுத்துதல் அவசியம். ஈரப்பதம் அதிகமானாலோ அல்லது வெப்பநிலை அதிகமாகும் பொழுது விளைபொருளின் நிறம் தரம் இரண்டும் குறைய வாய்ப்பு உள்ளது. அதிக ஈரப்பதத்தில் பொருள்கள் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. திறந்தவெளியில் உலர்த்தும்போது இத்தகு பாதிப்புகள் அதிகம். வெப்பம் மற்றும் ஈரப்பத கட்டுப்பாட்டு கருவியினால் சோலார் ட்ரையரில் கூடாரத்தினுள் வைக்கப்படும் விளைபொருளின் தன்மைக்கு ஏற்ப வெப்பமும் ஈரப்பதமும் குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட நேரத்துக்கு வைக்கப்படுகிறது.
எனவே தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் நெல் சாகுபடி செய்பவர்கள் கொப்பரை பழங்கள் காய்கறிகள் பருப்பு வகைகள் நெல் மற்றும் மீன் வரை கூடாரத்தில் உலர்த்தி மதிப்பு கூட்டி ஏற்ற காலத்தில் அதிக விலையில் விற்று பயன் பெற இயலும். எனவே விவசாயிகள் அனைவரும் உழவன் செயலியில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் பெற்று பயன்பெறவும் மேல் அதிக விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குனர் அல்லது வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அவர்களை அணுகிட மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார். சோலார் டிரையர் குறித்த விவசாயிகள் கலந்தாய்வுக்கு துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி உரிய ஏற்பாடுகள் செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu