உங்க வீட்டு மாமரம் பிஞ்சு உதிர்க்கிறதா? மாங்காய் பொடி தயாரிக்கலாம் வாங்க...

உங்க வீட்டு மாமரம் பிஞ்சுகளை உதிர்க்கிறதா கவலைப்படாதீர்கள். வீணாக உதிர்ந்து போகும் மா பிஞ்சிலிருந்து மாங்காய் பொடி தயாரிக்கலாம்.
தற்போது மாம்பழம் சீசன் தொடங்கிவிட்டது. பெரும்பாலான இடங்களில் மாம்பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வந்து விட்டன. ஆனால் இன்னும் பல பகுதிகளில் மாமரங்கள் பூப்பிடித்து பிஞ்சுகளாகி காய்களாக மாறத் தொடங்கி இருக்கின்றன. இந்த காலகட்டத்தில் மா பிஞ்சுகள் பெரும்பாலான மரங்களிலிருந்து உதிர்ந்து வீணாகப் போகின்றன. மா பிஞ்சுகள் இப்படி உதிரந்து வீணாகிறேதே எல்லா காய்களும் பழமானால் எப்படி இருக்கும் என நாம் வேதனை படுவது உண்டு. இப்படி மா பிஞ்சுகள் வீணாகி போகிறது என்று கவலைப்பட வேண்டாம். வீணாக கீழே உதிர்ந்து போகும் மாம்பிஞ்சுகளில் இருந்து மாங்காய் பொடி தயாரிப்பது எப்படி என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
மா, பலா, வாழை இவற்றை முக்கனிகள் என்று சொல்வார்கள். இந்த முக்கனிகளிலும் முதன்மையான இடத்தில் அதாவது முதல் இடத்தில் உள்ளது மாம்பழம் தான். மாம்பழத்தின் சுவைக்கு நிகர் மாம்பழம் தான். அதனுடன் வேறு எதனையும் ஒப்பிட முடியாது. அத்தகைய சிறப்பு மிக்க பழங்களில் ஒன்றானது மாம்பழம்.
மாமரம் பூப்படைத்து பிஞ்சு பருவத்தில் ஏராளமான காய்கள் உதிர்த்து விடுவது இயற்கையான ஒன்று தான். ஒரு கிளையில் 100 மா பிஞ்சுகள் பிடிக்கிறது என்றால் அதில் பத்து தான் காயாக பின்னர் பழமாக மாறும் மற்ற 90 சதவீதம்பெரும்பாலும் பிஞ்சு பருவத்திலேயே உதிர்ந்து விடுகிறது. இப்படி உதிர்ந்து விடும் மா பிஞ்சுகளை சேகரித்து மா பிஞ்சுகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் மாங்காய் பொடி தயாரிக்கலாம். அதன் மூலம் வீணாகும் விளைபொருளை விலை மதிப்புள்ள பொருளாக மாற்றி வருமானத்தை ஈட்ட முடியும்.
மாங்காய் பொடியில் கொழுப்பு, புரதம்,மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு தாதுக்கள், நார்ச்சத்து ஆகிய சத்துகள் உள்ளன. உணவு வகைகளை வகைப்படுத்தும் போது மாங்காய் பொடியானது நறுமணப் பொருட்களில் அடங்கியுள்ளது. மாங்காய் பொடியை இந்தியில் ஆர்ம்சூர் என்று அழைக்கிறார்கள். வடமாநில மக்கள் புளிக்குப் பதில் மாங்காய் பொடியை சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
சரி இனி மாங்காய் பொடி தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம். மா பிஞ்சை ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் உப்பு மற்றும் சிறிதளவு மஞ்சள் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும் பின்பு நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். மா பிஞ்சை 12 மில்லி மீட்டர் அளவில் துண்டு துண்டாக நறுக்க வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ மாங்காய்க்கு 20 கிராம் உப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சோலார் ஒளியில் உலர்த்தினால் 23 நாட்களும், மின்சாரம் மூலம் உலர்த்தினால் 16 மணி நேரமும் காய வைக்க வேண்டும். சோலார் மற்றும் மின் உலர்த்தி இல்லாதவர்கள் வெயிலில் உலர்த்தலாம். வெயிலில் உலர்த்தும்போது லேசான வெள்ளை துணி கொண்டு மூட வேண்டும். நன்கு காய்ந்தவுடன் அரைப்பான் மூலம் பொடி செய்து காற்று போகாத சேமிப்புகளில் அடைக்க வேண்டும்.
ஒரு கிலோ மாங்காய் பொடி தயாரிக்க 8 முதல் 10 கிலோ மா பிஞ்சுகள் தேவைப்படுகிறது. ஒரு கிலோ பொடியை ரூ. 300 முதல் ரூ. 500 வரை விற்பனை செய்யலாம். இந்த பொடியின் வைப்புக்காலம் 9 முதல் 12 மாதங்கள் ஆகும். அனைத்து சமையலிலும் புளிப்பு சுவைக்காக இதை பயன்படுத்தலாம் .கட்லட் மற்றும் சமோசா போன்றவைகளில் புளிப்பு சுவைக்காக மாங்காய் பொடியை பயன்படுத்தலாம்.
மிட்டாய் தயாரிப்பிலும் பயன்படுத்தலாம். இது பல மருத்துவ குணங்களையும் கொண்டது. விலை குறைவான காலங்களில் வீணாகும் பொருட்களை விலை மதிப்புள்ள பொருட்களாக அறுவடை பின்சார் மற்றும் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகள் சுய உதவி குழுவினர் ஊரக இளைஞர்கள் தொழில் முனைவோர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் போன்ற ஆலோசனைகளும் வேளாண் துறை சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆர்வமுள்ளவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையங்களை தொடர்பு கொண்டு பயன் அடையலாம் என்று வேளாண்மை துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu