திண்டுக்கல் பகுதியில் கால்நடை தீவனப்புல் வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம்
திண்டுக்கல் அருகே மூர்த்திநாயக்கன்பட்டி, தண்டல்காரன்பட்டி, உரிமைக்காரன்பட்டி, சிறுநாயக்கன்பட்டி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தீவனப்புல் அதிகமாக தேவைப்படுவதால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் நிலங்களில் தீவனப்புல்லை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தீவனப்புல்லை தேடி வந்து வாங்கி செல்வதால் நல்ல வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி கோபாலகிருஷ்ணன் என்பவர் கூறுகையில், திண்டுக்கல் அருகே மூர்த்தி நாயக்கன்பட்டியில் உள்ள என்னுடைய நிலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கம்பு நேப்பியர் தீவனப் புல்லை சாகுபடி செய்து வருகின்றேன். இதில் ஊடுபயிராக சோளம் மற்றும் உளுந்து கொடியை பயிரிட்டுள்ளேன். சுமார் 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யப்படுவதால் நல்ல வருவாய் கிடைக்கிறது.மேலும் இயற்கை உரமான மாட்டுச்சாணம், ஆட்டுப்புழுக்கை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு ஆகியவற்றை உரமாக பயன்படுத்துவதால் நல்ல மகசூல் கிடைக்கிறது. தீவன புல்லில் வெட்டுப்பூச்சி மற்றும் வேர் அழுகல் நோய் ஏற்படும்போது இயற்கையாக மாட்டு கோமியம் மற்றும் மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்து ஸ்ப்ரே அடிக்கிறோம். அனைத்தும் இயற்கையான முறையில் பயன்படுத்தப்படுவதால் இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படும் தீவனப்புல்லை உண்ணும் மாடுகளிடம் நல்ல சுகாதாரமான சத்தான பால் அதிகமாக கிடைக்கும். ஆகவே கால்நடை வளர்ப்போர் தேடி வந்து தீவனப்புல்லை வாங்கி செல்கின்றனர்.இதனால் எங்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu