வேளாண் நிறுவனங்களுக்கு 100 சதவீத மானியத்தில் ட்ரோன்கள்: வேளாண் அமைச்சகம்
பைல் படம்.
இந்தியாவில் விவசாயத்தை ஊக்குவிக்க, விவசாயத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் மலிவான கட்டணத்தில் கிடைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதற்காக வேளாண் இயந்திரமயமாக்கல் துணை திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் வேளாண் இயந்திரப் பயிற்சி மையங்கள், வேளாண் ஆராய்ச்சி மையங்கள், கிரிஷி விஞ்ஞான் மையங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் வாங்கும் ட்ரோன்களுக்கு 100 சதவீத மானியம் அல்லது ரூ.10 லட்சம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.
வேளாண் உற்பத்தியாளர் சங்கங்கள், ட்ரோன்கள் வாங்க 75 சதவீத மானியம் வழங்கப்படும். ட்ரோன்களை வாங்காமல் வாடகைக்கு எடுத்து விவசாய தேவைகளுக்கு பயன்படுத்தும் ஏஜன்சிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.6,000 வழங்கப்படும். டிரோன்களை வாங்கிப் பயன்படுத்தினால் ஹெக்டேருக்கு ரூ.3,000 வழங்கப்படும். இந்த நிதியுதவிகள் மற்றும் மானியம் 2023, மார்ச் 31ம் தேதி வரை கிடைக்கும்.
ட்ரோன் பயன்பாட்டின் மூலம் விவசாய சேவைகள் வழங்க, ட்ரோன் மற்றும் இணைப்பு பாகங்கள் வாங்கும் செலவில் 40 சதவீதம் அல்லது ரூ.4 லட்சம் இதில் எது குறைவோ, அது விவசாய கூட்டுறவு சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் ஊரக தொழில்முனைவோர்கள் அமைக்கும் ட்ரோன் வாடகை மையங்களுக்கு அளிக்கப்படும்.
ட்ரோன் வாடகை மையங்கள் அமைக்கும் வேளாண் பட்டதாரிகளுக்கு, ட்ரோன் வாங்கும் செலவில் 50 சதவீதம் அல்லது ரூ.5 லட்சத்தை மானிய உதவியாக பெறலாம். ஊரகத் தொழில் முனைவோர் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று, விமான போக்குவரத்து துறை இயக்குனரிடம் டரோன்களை இயக்குவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வாடகை மையங்கள், ஹைடெக் மையங்களுக்கான மானிய விலை ட்ரோன்கள், குறைந்த செலவில் ட்ரோன் பயன்பாட்டை அதிகரிக்கும். உள்நாட்டில் ட்ரோன் உற்பத்தியையும் ஊக்குவிக்கும். ட்ரோன் செயல்பாடுகள் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் அனுமதிக்கும் வழித்தடங்களில் அனுமதிக்கப்படுகிறது.
இந்தியாவில் ட்ரோன் பயன்பாட்டை ஒழுங்குமுறைப்படுத்த 'ட்ரோன் விதிமுறைகள் 2021'-ஐ விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. விவசாயம் மற்றும் வனப்பகுதியில் பூச்சி மருந்து மற்றும் ஊட்டச்சத்து தெளிப்புக்கு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை வேளாண்துறை கொண்டு வந்துள்ளது. இந்த விதிமுறைகளை, விவசாய ட்ரோன்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu