கூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு
மாதிரி படம்
கிராமங்களில் நாட்டுக் கோழிகள் முறையான பராமரிப்பின்றி வளர்க்கப்படுகின்றன. அடைவதற்கு இடவசதி இல்லாததால் குஞ்சுகளை காகம், பருந்து, வல்லூறு, நாய் மற்றும் பூனைகள் கவ்வி செல்கின்றன.
அதற்கு கூண்டு முறையில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பது லாபம் தரும். 6 அடி நீளம், 4 அடி அகலம். 2 முதல் 3 அடி உயரம் கொண்ட அரை அங்குல கம்பிகளால் கட்டப்பட்ட கூண்டு அமைக்க வேண்டும். தரையிலிருந்து 3 அடி உயரத்தில் பொருத்தி, கோழியின் எச்சத்தைச் சேகரிக்க கூண்டிற்கு அரை அடி கீழே தட்டு வைக்க வேண்டும்.
நீள, அகலத்தின் நடுவில் தடுப்பு கம்பி பொருத்தி 4 அறைகளாகப் பிரித்து கம்பிவலை வைக்க வேண்டும். இந்தக் கூண்டை வராந்தாவில் வைத்து நாட்டுக்கோழி வளர்க்கலாம். கொட்டகை தேவையில்லை. கோழிகளுக்குத் தீவனம் மற்றும் தண்ணீரை தட்டுகளில் கூண்டின் உள்ளேயே தரலாம். ஒவ்வொரு அறையிலும் 10 நாட்டுக் கோழிகளை ஒன்றரை கிலோ எடை அடையும் வரை வளர்க்கலாம். கூண்டின் 4 அறையிலும் சேர்த்து மொத்தமாக 40 கோழிகளை வளர்க்கலாம்.
கூண்டின் கீழே அல்லது மேலே இன்னொரு அடுக்கு அமைத்து 8 அறைகளாக்கினால் குஞ்சு பொரித்தது முதல் 5 மாத வயது வரையான 80 நாட்டுக் கோழிகளை வளர்க்கலாம். ஒரே கூண்டில் 2 முதல் 3 அடுக்குகள் வரை வைத்து நாட்டுக் கோழிகளை வளர்த்து லாபம் ஈட்ட முடியும்.
கூண்டு முறை வளர்ப்பில் காகம், பருந்துகளிடமிருந்து கோழிக்குஞ்சுகளை காக்க முடியும். . சுகாதாரமான முறையில் தீவனம் மற்றும் தண்ணீர் அளிக்க முடியும். தடுப்பூசி போடுவது எளிது. கோழிகள் நோயின்றி வளரும். குஞ்சு பொறித்த 7வது நாள் மற்றும் 8வது வாரத்தில் தடுப்பூசி போட்டால் நோய் தாக்காமல் ஆரோக்கியமாக வளரும். தேவைப்படும் போது கோழிகளின் அலகுகளை வெட்டுவதும் வெளிப்புற ஒட்டுண்ணிகளை நீக்குவதும் எளிது.
போதுமான அடர்தீவனம் அளித்தால் மூன்று மாதங்களில் சராசரியாக ஒரு கிலோ உடல் எடை கிடைக்கும்..இவ்வாறு கூண்டு அமைப்பதன் மூலம் அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கு தொல்லையின்றி கோழிகளை பராமரிக்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu